தமிழகம் குறித்த எனது பார்வை: ஆண்டு தோறும் வளர்ச்சி,

இதை எப்படி சாத்தியமாக்குவது, இதற்காக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டிய வளர்ச்சிப் பணிகள் எவை, அதை சாத்தியமாக்கத் தேவையானப் பொருளாதாரம் மற்றும் நிர்வாகத் திறமைகள் ஆகியவற்றை அதிகரிக்க எப்படி திட்டமிடுவது, இதனை சாதிக்கத் தேவையானக் கூட்டணிகளை நாம் அடையாளம் காண்பது எப்படி, இலக்கை அடையும் பாதையில் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தேவையற்ற சுமைகள் எவை, மாற்றங்களை நிகழ்த்த நம்முடைய திறமைகளை நாமே எப்படி பட்டை தீட்டிக் கொள்வது, கழகத்தின் கொள்கைகளுக்கு பாதகமில்லாமல் – நமது சுய மதிப்பீடுகளை இழக்காமல், மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பேச்சுவார்த்தைகள் எவை, இதுபோன்ற அனைத்து உண்மைகளுக்கும் நாம் எந்தளவு நெருக்கமாக இருக்கிறோம் – துணிந்து கனவு காண்போமா ? தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது திட்டங்கள்:

1. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த, சிறந்த மருத்துவப் பணியாளர்களை அமர்த்தி, உரிய மருத்துவக் கருவிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை நிறுவுதல்; ஆரோக்கிய மிக்க குடிமக்களை உருவாக்க, சுகாதாரத்துக்கான அரசாங்க முதலீடுகளை உயர்த்துவதை ஆதரித்து, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி திட்டங்களில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுவதை உறுதி செய்தல்; தாய்வழி சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்து ஆகியவற்றை மேம்படுத்துதல்; குழந்தைகள் இறப்பு சதவீதத்தைக் குறைக்க திட்டமிட்ட அணுகுமுறை மற்றும் குறைந்த செலவில் ஊட்டச் சத்து; எச்.ஐ.வி./ எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை விரிவாக்குவது: தொற்று நோய் பரவுவதைத் தடுக்க பரவலாகவும், எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலும், நோய் தணிப்புக்கான மருந்துகளை உரிய முறையில் செலுத்துதல் குறித்தும், நோய் பாதிப்பால் ஏற்படக் கூடிய பின்விளைவுகள் குறித்தும் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து சமூக, முன்னேற்ற, பொருளாதாரத் திட்டங்களிலும், பொதுச் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளித்தல்; எளிதில் பரவக்கூடிய, நாள் பட்ட வியாதிகளைத் தடுக்க உரிய தற்காப்பு நடவடிக்கைகள் ; நோய் பாதிப்புகளில் இருந்து பரவலான தற்காப்பு ; நடவடிக்கை எடுப்பதற்காக ஆங்கில மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ முறைகளை வழங்குதல் ; ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களை நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க காலத்துக்கு ஏற்ப மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துதல் ;

2. தரமானக் கல்வித்தரத்தை அடைய, இப்போதுள்ள புத்தகங்கள், பலகைகள் போன்ற கல்விக் கட்டமைப்புகளைக் கடந்து புதிய வழிமுறைகளை கண்டறிந்து அறிமுகப்படுத்துதல்; மாணவ, மாணவியரின் தனிப்பட்டத் திறமைகளை ஊக்குவித்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதன் மூலம் சிறந்த மனித வளத்தை உருவாக்குவது; உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி ஆகியவற்றை கிராமப்புற மாணவ, மாணவிகள் பெறுவதை எளிமையாக்குவது; நவீன கல்வி கட்டமைப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் உயர்கல்வி பெறுவதில் உள்ள தடைகளை அகற்றுதல்; கணிப்பொறி, அலைப்பேசி மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் தமிழ் மொழியை ஊக்குவிப்பதன் மூலம் அறிவுசார் துறைகளில் ஏற்பட்டுள்ள இடைவெளிகளைக் களைதல்; பாரம்பரியமிக்கக் கல்வி முறையை ஆதரித்தல்; திராவிட பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கண்டறிந்து, அவற்றை முறையாகப் பதிவு செய்வது;

3. சமூகத்தில் பாலின சமத்துவத்தை உருவாக்குவதன் மூலம், பெண் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் பாகுபாடாக நடத்தப்படுவதை தடுத்து, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூக நன்மைகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்தல்; வேலையிலும் – குடும்பத்திலும் பெண்களுக்கு சமநிலை ஏற்படுத்துவது; பொது காரியங்களில் பங்கெடுக்கவும், முடிவெடுக்கவும் பெண்களின் ஆலோசனைகளை பெற்று, அவற்றை செயல்படுத்துவதில் முன்னுரிமை; தமிழக சட்டமன்றத்திலும், கழக அமைப்புகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தல்;

4. மின் உற்பத்தியை அதிகரித்தல்; மின் பகிர்மானத்தின் போது மின் இழப்பு மற்றும் மின் திருட்டை குறைத்தல்; தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களை அதிகமாக உருவாக்குதல்; சூரிய ஆற்றல் மின் உற்பத்தியை ஊக்குவித்தல்; சூரிய சக்தி மின் உற்பத்தி செய்வதற்கான முதலீட்டு செலவை குறைத்து, குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சூரிய ஓளி மின் உற்பத்தி செய்ய மானியம் வழங்குவது; பொதுமக்கள் – தனியார் பங்களிப்புடன் மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கி, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரத் தளங்களுக்கு பயன்படுத்துதல்; மாற்று எரி சக்தி மூலம் மின் உற்பத்தியில் கவனம் செலுத்தி, அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்கத் தொகைகளை வழங்குதல்;

5. தென்னிந்திய நீர் அமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம், தென் பகுதி மாநிலங்கள் ஒருங்கிணைந்து ஆற்று நீரை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்தல்; நீர்வளங்களை பாதுகாத்தல், அதிகரித்தல், பயன்படுத்தக் கூடிய நீரை சேமித்தல்; நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நீர் பயன்பாடு குறித்து விரிவாக எடுத்து உரைத்தல்; குடியிருப்பு பகுதிகள், ஆலயங்கள், கிராமப்புற தொட்டிகள், தடுப்பணைகள் ஆகியவற்றில் மழைநீரை சேகரித்து, பராமரித்தல்; சுத்திகரிக்கப்பட்ட நீரை வணிக நிறுவனப் பயன்பாடுகளுக்கு சுழற்சி முறையில் பயன்படுத்துதல்; வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி, சுழற்சி முறையில் நீர் மேலாண்மை சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்தல்; நீர் மேலாண்மைத் துறையில் ஆய்வு மற்றும் சிறப்பு பயிற்சி ஆகியவற்றை ஊக்குவித்தல்; மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து நிலவி வரும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான நுட்பமான தீர்மானங்களை நிறுவுதல்;

6. தொழிற்துறையில் அதிக முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்; அடிப்படை வேலைகளை மட்டும் உருவாக்குவது என்பதைக் கடந்து, பல்வேறு காலங்களிலும், மேம்பட்ட தரங்களிலும், அறிவுசார் வேலை வாய்ப்புகளையும் உருவாக்க நடவடிக்கை எடுத்தல்; ஒட்டுமொத்த தொழில்துறையையும் முன்னேற்றும் வகையில், கிராமங்கள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும், உலகத் தரத்திலான தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவது; நேர்மையான பொருளாதாரத்தை உருவாக்கும் கொள்கைகளை ஆதரித்தல்;

7. வேளாண்மையை பாதுகாக்க, விளைநிலம், பாசன நீர், நிதியுதவி, வேளாண் உபகரணங்கள் போன்ற அடிப்படை தேவைகள் மற்றும் ஆதாரங்களை வழங்குதல், ஆய்வு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை விரிவாக்குதல்; விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல, அந்தந்த பகுதிகளை சேர்ந்த தனியார்களின் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்டப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கி, செயல்படுத்துதல்; உலக அளவிலான சந்தைகளை, உள்ளூர் விவசாயிகள் பயன்படுத்தும் வகையிலான கூட்டுறவு அமைப்புகளை நிறுவுதல்; அந்தந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்த பயிற்சியளித்து, உலக அளவிலான சந்தைகளை உள்ளூர் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்தல், உள்ளூரில் அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தருவதன் மூலம் உள்ளூர் மக்கள் நகரப் பகுதிகளுக்கு இடம்பெயர்வதைக் குறைத்தல்; கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஏற்ற வகையில் சட்டங்களைத் தளர்த்துவதன் மூலம் தமிழகத்தின் அடிநாதமாக உள்ள குடும்ப – சமூக அமைப்புகளை பாதுகாத்தல்;

8. தமிழகத்தின் கடலோரப் பகுதியாக உள்ள 1076 கி.மீ. தொலைவுள்ள கடற்கரை நெடுகிலும் வசிக்கும் மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுதல்; மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொட்டிகள் மற்றும் குளங்களை செயற்கையாக அமைத்து உருவாக்கப்படும் ஒருங்கிணைந்த மீன் பண்ணைகளில் மீன் வளர்ப்பை அறிமுகம் செய்தல்; இயந்திரப் படகுகள், வலைகள் மற்றும் ஆழ் உரை பெட்டகங்கள் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்குதல்; ஆழ்கடலில் மீனவர் பாதுகாப்பை அதிகரித்தல்; விற்பனை கட்டமைப்புகளை மேம்படுத்தி, சரியான விலை கிடைக்க வழிவகை செய்தல்; படித்த மீனவர் நலன் சார்ந்த இணையதளங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் நேரடி வியாபாரம் மேற்கொள்ளும் வகையில், படித்த மீனவ இளைஞர்களுக்கு போதிய பயிற்சிகள் அளித்தல்; மீன்கள் மற்றும் கடல் உணவு வகைகளை தரமாக உற்பத்தி செய்யவும், சந்தை படுத்தவும் உரிய பயிற்சிகள் அளித்து, அதற்கான சந்தைகளை விரிவுபடுத்துதல்; மீனவர்களின் வாழ்வாதாரங்களை விரிவுபடுத்தி, அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்;

9. சீரான சாலைகள், பாதுகாக்கப்பட்டக் குடிநீர், சுகாதரமிக்க சுற்றுச் சூழல், முறையான கழிவுநீர் கால்வாய்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதன் மூலம் நகரப் பகுதிகளின் கட்டமைப்புகளை பலப்படுத்துதல்; நெரிசலற்ற குடியிருப்புகள், சுத்தமான சுற்றுப்புறம், அடிப்படை கட்டமைப்புகள், வாழும் நிலை ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் நகர பகுதிகளில் உள்ள மேல்தட்டு – குடிசைப் பகுதி என்ற பாகுபாட்டை களைந்து மக்களிடையே சமத்தன்மை ஏற்படுத்துதல்; நகர சூழல்களுக்கு ஏற்ற வேளாண் உற்பத்தி, காய்கனி தோட்டங்கள் அமைப்பதை ஊக்குவித்தல்; நகரப் பகுதிகளின் பரவலான வேளாண் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பெண்களும் செயல்படுத்தக் கூடிய வேளாண்மை கல்வி மற்றும் வேளாண் உற்பத்தி ஆதாரங்களை அதிகரிப்பதுடன், எதிர்கால உணவுத் தேவைக்கு ஏற்ப நிலையான திட்டமிடுதல்; குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதிகள், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை சிறப்பாக ஏற்படுத்தி, பராமரிக்கக் கூடிய வகையில், நகரப் பகுதிகளின் உள்ளாட்சிக் கட்டமைப்புகளை பலப்படுத்துதல்;

10. சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றில் பரந்த நோக்கத்துடன் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்தல்; சுற்றுபுறச் சூழலை பாதுகாக்கக் கூடிய இயற்கை ஆதாரங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது; விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலங்களில் காடு வளர்ப்பை ஊக்குவித்தல்; பன்முகத் தன்மை வாய்ந்த உயிரிகளின் இழப்பைக் குறைப்பதன் மூலம் சிறந்த சுற்றுச் சூழலை 2020ம் ஆண்டுக்குள் உருவாக்குதல்; எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுச் சூழலும், ஆரோக்கியமும் நிறைந்த பகுதியாக தமிழகத்தை உருவாக்கும் நமது பணியில், சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள், சட்ட வல்லுனர்கள் கொண்ட குழு, தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், வியாபார நிறுவனங்கள் ஆகியோரை இணைத்துக் கொண்டு செயலாற்றுதல்; மொத்தத்தில் இன்றுள்ள தலைமுறையினரின் தேவைகளை அடைவதில், எதிர்கால சந்ததியினரின் திறன்களை சமரசம் செய்து கொள்ளாமல், இயற்கை வளங்களில் இருந்து பயனடைதல்;

2015 மு.க.ஸ்டாலின் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.