சென்னை | 22/03/2016 |


உலகம் முழுவதும் இலட்சக்கணக்கானோரால் கொண்டாடப்படும் “உலக தண்ணீர் தினம்” விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் தன்னையும் இணைத்துக் கொண்டார். 1992 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி, “சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி” குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து, உலகம் முழுவதும் “உலக தண்ணீர் தினம்”  கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் வேலை வாய்ப்புகள் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தண்ணீர் தேவையைச் சார்ந்தே இருக்கிறது. அதிலும், 40 சதவிகிதம் வேலைகள் தண்ணீரை மட்டுமே சார்ந்தே இருக்கிறது.  விவசாயம், மின் திட்டங்கள், தொழிற்சாலை, மீன் பிடி தொழில்கள், சுகாதாரம் போன்ற பிரிவுகளுக்கு தண்ணீர் அவசிய தேவையாக இருக்கிறது. எனவே, உலக தண்ணீர் தினத்தை “தண்ணீரும், வேலை வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடுகிறது.
தண்ணீர் பொருளாதார வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் திமுக அரசு, மாநிலம் முழுவதும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துவங்கி, பல்வேறு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றியது.  குறிப்பாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற முக்கியமான குடிநீர் திட்டங்களை நிறைவேற்றியது. மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் திட்டம் போன்றவை திமுகவின் சிறப்புத் திட்டங்களாகும். மேலும்,  நதி நீர் இணைப்பை  முக்கியப்படுத்திய திமுக அரசு, 369 கோடி ரூபாய் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டம் மற்றும் 189 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டமும்  துவங்கப்பட்டது. குடிநீர் திட்டங்களுக்கும், கடல் நீரை நதி நீராக்கும் திட்டங்களுக்கும், நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கும் திமுகவைப் போல் தமிழகத்தில் எந்த அரசும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. மேலும், இந்த உலக தண்ணீர் தினத்தில் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், தண்ணீர் பற்றாக்குறை எங்கும் இல்லை என்ற நிலையை உருவாக்கவும் பாடுபடுவோம். விவசாயத்திற்கு தண்ணீரில்லா நிலை என்றும் வராத வகையில் திட்டங்களை உருவாக்குவோம். தொழிற்சாலைகள், மின் திட்டங்கள் போன்றவற்றிற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு புதுப் புது குடிநீர் திட்டங்களை கொண்டு வருவோம். வேலை வாய்ப்புகளை  பலமடங்கு பெருக்க உறுதி ஏற்போம். தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைத்து தண்ணீர் தேவையில் தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல அனைவரும் உறுதியேற்போம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


செய்திகளை பகிர்ந்து :