சென்னை | 15/03/2016 |


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், மார்ச் 13 ஆம் தேதியன்று நடுரோட்டில், பட்டப்பகலில் நடந்த கொடூரமான கொலை சம்பவத்திற்கு தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இந்த கொலைச் சம்பவம், மாநிலத்தில் சட்ட ஒழுங்கின் மோசமான நிலையைக் காட்டுகிறது. அதிமுக அரசு, இந்த ஐந்து வருடங்களில் தமிழகத்தை காட்டுமிராண்டித் தனமாக மாற்றியுள்ளது. கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் சங்கர், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இவரது மனைவி கௌசல்யா, மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, பலமுறை புகார் அளித்தும் காவல்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். 
சமூகத்தில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தினைக் கொண்டுவர திமுக தொடர்ந்து உழைத்துக் கொண்டு இருக்கிறது என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. சமூக  நல்லிணக்கத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் ஜெயலலிதா அரசு முடக்கியது. மேலும், இந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கை மாநிலத்தில் சீரழிய வைத்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.  முதலமைச்சர் ஜெயலலிதா இது பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் இருக்கிறார். காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள ஜெயலலிதா, டாஸ்மாக் கடைகளுக்கும் தன்னுடைய படம் போட்ட பேனர்களுக்கும் பாதுகாக்க மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்துகிறார். 
‘கோயம்புத்தூர்’ தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” என்று அழைக்கப்படுகிறது. இது வன்முறை மற்றும் துப்பாக்கி கலாச்சாரத்தின் கூடாரமாக மாறிவருகிறது.  இதற்கு செயலற்ற அதிமுக ஆட்சியே காரணம்.  தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா? என்பது மக்களின் பெரும் கேள்வியாக இருக்கிறது. பாதுகாப்பற்ற சூழலில் ஏற்படுத்தி மக்களை ஐந்தாண்டுகளாக பயத்தில் வைத்துள்ளது அதிமுக அரசு. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டிக் கொண்டார். 


செய்திகளை பகிர்ந்து :