இந்திய தேசம் குறித்த எனது பார்வை:

கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார மேன்மையை அடைதல். இந்த இலக்கை அடைய திராவிட முன்னேற்றக் கழகமும், எங்கள் கூட்டணி கட்சிகளும் உரிய செயல் திட்டங்களை வகுத்து, அவற்றை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் இந்திய அளவில் அமைதி, வளர்ச்சி மற்றும் செழுமை ஆகியவை நிலை நிறுத்தப் படுவதை எதிர்வரும் காலங்களில் அனைவரும் உணர முடியும். இந்த தேசத்தின் எப்பகுதியை சேர்ந்தவர்கள் நாம் என்பதை பொருட்படுத்தாமல், அனைவரும் இந்தியர்களே என்ற உணர்வுடன் ஒருங்கிணைந்து, தோளோடு தோள் நின்று, திட்டமிட்டு உழைப்பதன் மூலம் வளமிக்க எதிர்காலத்தை நிச்சயம் அடையலாம். நம் அனைவருக்கும் நலம் ஏற்படுத்தக் கூடிய வகையிலான, ஒருங்கிணைந்த இலக்குகளை அமைத்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு தனிப்பட்ட குடிமகனின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். கடந்த சில ஆண்டுகளாக தேசிய அடையாளமும், ஒற்றுமை உணர்வும் சிறிது குறைந்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருவதற்கு காரணம், நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை மறந்து, ஒருங்கிணைந்த நிலையில் நமது பலத்தை புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள இயலாமையே ஆகும்.

நான் கனவு காணும் இந்திய தேசம் :

 1. 1.மத, இன, சாதி, பேத, வர்க்க, பொருளாதார வேறுபாடுகள் மக்களின் கால் விலங்குகளாக இருந்து தடை ஏற்படுத்தாமல், எதையும் துணிந்து கனவு காணும் மக்கள் நிறைந்த ஒரு தேசம்.
 2. 2.அமைதியை வேண்டி மக்கள் போராடும் சூழல் இல்லாத ஒரு தேசம்.
 3. 3.சட்டங்கள், குடி மக்களின் உரிமைகளை பறிக்காமல், அவர்களது வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்வதாக உள்ள ஒரு தேசம்.
 4. 4.ஒவ்வொரு பகுதியை சேர்ந்தவர்களும் தங்கள் மதிப்பீடுகளை அறிந்து, அதே சமயத்தில் பிற பகுதிகளில் வசிப்பவர்களின் மதிப்பீடுகளையும் முழுமையாகப் புரிந்து கொண்டு, ஒருவரை ஒருவர் மதிக்கும் மக்கள் நிறைந்த ஒரு தேசம்.
 5. 5.மாநிலங்களின் சுயாட்சி வலுப்பெற்று, மத்தியில் கூட்டாட்சி தத்துவம் திடமாக நிலை கொண்ட, குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது அரசியல் தலைமைக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, பிறரை விளிம்பு நிலைக்கு தள்ளாத வகையிலான மாபெரும் அரசியலமைப்பு கொண்ட ஒரு தேசம்.
 6. 6.பொது சுகாதாரம், கல்வி மற்றும் முழு நம்பிக்கையுடன் சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு திறமைகளை அனைத்து தரப்பு குடிமக்களுக்கும் உறுதி செய்த ஒரு தேசம்.
 7. 7.சிறந்த தரத்திலான நிறுவனங்கள் உருவாவதை ஆதரிப்பதன் மூலம், தனது குடிமக்களுக்கு இணையற்ற வாய்ப்புகளை உருவாக்கித்தரும் கட்டுக்கோப்பான ஒரு தேசம்.
 8. 8.சமூகப் பொறுப்பு மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த முதலீட்டாளர்கள் பெருகக் கூடிய சந்தை கொள்கைகளை உருவாக்கும் ஒரு தேசம்.
 9. 9.சுற்றுச் சூழலை பாதிக்காத அளவில் பொருளாதார வளர்ச்சி கொண்டதொரு தேசம்.
 10. 10.வெளியுறவு நடவடிக்கைகளின் மூலம் உள்நாட்டிலும், சுற்றுப்புற நாடுகளிலும் அமைதி மற்றும் வளர்ச்சியை நிலை நிறுத்தும், வலிமை மிக்க கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படை ஆகியவற்றை நிறுவியுள்ள ஒரு தேசம்.
 11. 11.குடி மக்களின் உயர்வை அடிப்படையாகக் கொண்ட, நீதிநெறிகளுக்கு உட்பட்ட கொள்கைகளை உருவாக்கும் தேசம்.
 12. 12.வேற்றுமைகளுக்குள், ஒற்றுமையை கொண்டாடும் ஒரு மாபெரும் தேசம்.

2015 மு.க.ஸ்டாலின் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.