மு.க.ஸ்டாலின் –வாழ்க்கைச் சுருக்கம்

சூரியன் உதயத்துடன் மு.க.ஸ்டாலின் எழுந்து ஐ.ஐ.டி வளாகத்தில் தனது சுறுசுறுப்பான காலை நடைபயிற்சியுடன் அந்த நாளைத் தொடங்குகிறார். பரபரப்பான சென்னை மாநகரின் மையப் பகுதியில் துள்ளியோடும் மான்களை காணக்கூடிய அந்தப் பசுமையான சூழலின் அந்த நேரக் காற்றே ஒரு அலாதியான இன்பத்தையும், புத்துணர்வையும் அளிக்கும். அது நிச்சயமாக நகரத்துடனும் அதன் மக்களுடனும் ஒருவிதமான உறவைத் தூண்டிவிடும். தனது இருப்பிடமாக அவர் கூறும் இந்த இடத்துக்குத் தன்னால் என்ன செய்யமுடியும், இந்த மாநகர் தனக்கு என்ன செய்திருக்கிறது என்ற சிந்தனையோட்டத்துடன் மு.க.ஸ்டாலின் தனது நாளைத் தொடங்குகிறார்.

மற்ற எவரையும் போலவே இந்த எளிமையான மனிதர் தனது பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவதிலும், நண்பர்களுடன் உரையாடுவதிலும், தனது மனைவியால் பரிமாறப்படும் வீட்டில் சமைத்த உணவை உண்பதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அவரது அதிகமானத் தேவை தமிழக மக்களுக்கு எப்போதும் சேவை செய்வதேயாகும், இதுவரையில் அவரது சாதனைகளே அதற்கு சாட்சியாக விளங்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஏறத்தாழ அரை நூற்றாண்டாக இதுவரை தனது சாதனைகளைப் பற்றி மு.க.ஸ்டாலின் திருப்தி அடைந்தாலும், அதற்கு முடிவுதான் உண்டோ? நிச்சயமாக, வளர்ச்சிகள் மேலும் வளர்ச்சிகளுக்கு இட்டுச்செல்லும், சமூக மாற்றங்கள் மேலும் மாற்றங்களை கோரும், பல்வகைப் பண்பாடுகள், கலாசாரங்கள் கலந்து மேலும் பல புதிய பாரம்பரியங்களைப் படைத்து தொடர்ந்து உருவாகிவரும் தமிழகத்தில் அதற்கு முடிவே கிடையாது. ஆனால் எப்போதும் போலவே இந்த சவால்களைச் சந்திக்க மு.க.ஸ்டாலின் தயாராகவே உள்ளார். ஏனெனில் தமிழர்களின் வாழ்க்கை, மொழி, பண்பாடு ஆகியவற்றின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய தமிழகம் அவரது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது.

அந்த நாட்களில்தான் சுதந்திர இந்தியாவின் இளந்தமிழகம் சமூகசீர்திருத்த அரசியலால் உருவாக்கப்பட்டு வந்தது. மு.க.ஸ்டாலினின் தந்தையான திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அவரது கூர்மிகு மதிநுட்பம், எழுத்துத்திறன், வாதத்திறன் ஆகியவற்றால் மாறிவந்த இந்தியாவில் தமிழர்களின் அடையாள சின்னமாகப் பார்க்கப்பட்டார். இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு, திராவிட நாடு ஆகிய முழக்கங்களுடன் பீடுநடை போட்டு முன்னேறிய கலைஞர் அவருக்கே உரிய பாணியில் தமிழகத்தின் சமூக ஆற்றலை வடித்தெடுப்பதில் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.

இந்த சமுதாய விழிப்புணர்வுக்கிடையில், முத்துவேல் கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகன் 1953ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று பிறந்தார். அவருக்கு ரஷியாவின் புரட்சித் தலைவரான ஸ்டாலின் பெயர் சூட்டப்பட்டது; இவ்வாறு அப்பெயர் அரசியலில் ஒரு இடம் பெறவும், தலைமையேற்கவும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பெயர் அவருக்கு பல தடங்கல்களை உருவாக்கியது என்றாலும், அவையனைத்தும் அவர் அடைய விரும்பிய இடத்தை அடைய ஏணிப்படிகளாகின.

ஒருமுறை ஸ்டாலின் கூறினார்: ”குழந்தைப் பருவம் எவ்வளவுக்கு எவ்வளவு ஊக்கமும் ஊட்டமும் அளிப்பதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நம்பிக்கை கொண்டவர்கள் உருவாகிறார்கள்”. அவர் கூறியது அவரது குழந்தைப் பருவத்தை-பின்னர் அவர் அடியெடுத்து வைத்த பொது வாழ்க்கையின் சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் நேர்மாறான பருவத்தைக் காட்டுவதாகும். அவரது சகோதரி செல்வி, சகோதரர்கள் அழகிரி, தமிழரசு ஆகியோருடன் வீட்டில் கலகலப்பாக ஸ்டாலின் இருந்தார். ஆனால் அன்றாடம் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் பிரமுகர்கள் வந்துபோகின்ற அரசியல் மற்றும் அறிவார்ந்த சூழ்நிலையில் அவர் வளர்ந்தார்.

கல்வியில் ஸ்டாலின் இழந்ததை தன்னுடைய தனித் திறமைகள் மற்றும் நட்புரீதியிலான தன்மையினாலும் ஈடுகட்டினார்; இவற்றால் அவர் எந்த முகாமிலும் தலைவராக ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அவருடைய பெயர் மற்றும் அரசியல் பின்னணி காரணமாக சில பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள மறுக்கப்பட்ட பிறகு அவர் சென்னை கிறிஸ்துவ கல்லூரி பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

அவரது இளம் பருவம்பற்றியும், அவருடன் நட்பு குறித்தும் ஸ்டாலினின் வகுப்புத் தோழரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவருமான தாவூத் மியா கான் நினைவு கூர்ந்தார். அவர் கூறுகிறார், “சில ஆசிரியர்கள் தி,மு.க எதிர்ப்பாளர்கள். ஸ்டாலின் கலைஞரின் மகன் என்பதால் அவருடன் விரோத மனப்பான்மையுடனே அவர்கள் இருந்தார்கள். இந்தக் காலத்தில்தான் கலைஞரும், தி.மு.க.வும் அரசியல் செல்வாக்குப் பெற்றுவந்ததோடு அப்போதைய சமுதாயத்தில் நிலவிய சமூகப் பாகுபாடுகளை அடித்துத் தகர்த்து வளர்ச்சி அடைந்து வந்தனர். அவரிடம் எந்தக் குறையும் இல்லாதபோதும், ஸ்டாலினுக்கு எதிரான கோபமும், பகைமையும் உச்சகட்டத்தில் இருந்தன. கிண்டல்கள். கேலிகள், விமர்சனங்கள் எல்லாம் இருந்தபோதும், ஸ்டாலின் பொறுமை காத்து மிகவும் நாகரீகமாக நடந்துகொண்டார். தான் ஒரு மரபில் இருந்து வந்துள்ளதை உணர்ந்திருந்த ஸ்டாலின் அவரது தந்தைக்கு களங்கம் ஏற்படும் வகையில் எதையும் செய்ததில்லை. அவரை ஏளனம் செய்தவர்களை அவர் பொருட்படுத்தவே இல்லை”.

எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஸ்டாலினின் பொது வாழ்க்கை எதிர்பாராத விதமாக பள்ளியில் தொடங்கியது. ஒரு முடித்திருத்தும் கடையில் எளிமையான தொடக்கத்துடன், கோபாலபுரம் பகுதியில் இளைஞர் மன்றம் ஆரம்பிக்க அவர் தனது தந்தை மற்றும் தி.மு.க.வின் வட்ட அமைப்பிடம் அனுமதி பெற்றார். அவரது தலைமையில் குழந்தைகள் சீர்திருத்த சங்கமும் உருவாயிற்று. அவரை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் கட்சிக்கும் சமுதாயத்துக்கும் தன்னால் இயன்றதைச் செய்யும் அவரது முன்முயற்சியையும் நேர்மையையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

ஆனால் விரைவிலேயே அவர் தி.மு.க.வைப்பற்றியும் அதன் கொள்கைகள்பற்றியும் பிரச்சாரம் செய்யும் பேரணிகள், கூட்டங்களை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்து, மக்களைக் கட்சியில் இணையவைத்து, அதன் மூலம் கட்சிக்குள்ளும், மக்களிடமும் அவரது எளிமையான ஆனால் சிந்தனைத் திறன் மிக்க பணியால் செல்வாக்கு பெற்றார்.

கல்லூரியில் சேரும் காலம் வந்தது; சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் பட்டப் படிப்புக்கு ஸ்டாலின் சேர்ந்தார். தனது கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் எடுத்துக் கூற நாடகம் சிறந்த மேடை என்று கண்ட ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பயணம் செய்த நாடகக் குழு ஒன்றில் உறுப்பினராகச் சேர்ந்தார். மேடைமீது அவருக்கு இருந்த இயற்கையான ஆர்வமும், பேச்சுத் திறனும் மக்களிடையே சிறப்பானதொரு விழிப்புணர்வைத் தூண்டிவிட்டு அவரை அவரது பயணத்தின் அடுத்த கட்டத்துக்கு உயர்த்திவிட்டது.

இது தி.மு.க.வுக்கும் குறிப்பிட்ட காலகட்டமாகும். ஸ்டாலின் பிறந்த அதே ஆண்டில் நடிகர் எம்.ஜி.ஆர் தி.மு.க.வில் இணைந்தார். கிராமப்புற மக்கள் சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினரிடையே கட்சி பெருமளவில் ஊடுருவியது. சமூக சீர்திருத்தவாதிகள், தமிழ் மொழி ஆர்வலர்கள், அரசியல் பெருந்தலைகள் மத்தியில் வளர்ந்த இளம் ஸ்டாலின் எம்.ஜி.ஆரால் பெரிதும் கவரப்பட்டார். ஸ்டாலின் வெளிப்படுத்திய ஆற்றலைக் கண்டு வியந்த எம்.ஜி.ஆர். அவருக்கு ஆதரவு அளித்து மேலும் உற்சாகப்படுத்தினார். இவ்வாறு அவர் பொது வாழ்க்கையில் அவருக்கு இடையூறாக இருந்த கலைஞரின் நிழலுக்கு அப்பால் உறுதியாக அடிஎடுத்து வைத்தார்.

தனது பாதையில் தனது மகனும் அரசியலுக்குள் வருவதைப் பற்றி கலைஞர் அவர்களுக்கும் தயக்கங்கள் இருந்தன, எனவே அவர் ஸ்டாலினுக்கு ஊக்கம் அளிக்கவோ வளர்க்கவோ எந்த முயற்சியும் செய்யவில்லை. கட்சி தனது தலைவர்களை தேர்வு செய்யும் என்ற திடமான நம்பிக்கையில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் காலம் மீண்டும் முடிவு செய்து இளம் ஸ்டாலினை தேர்வு செய்தது; அது இயற்கையாக வெளிப்பட்டது.

மு.க.ஸ்டாலின் அவர்களைப் பொறுத்தமட்டில், புகழ்பெற்ற தந்தையின் மகன் என்பது பெரும் சவாலாகவே இருந்தது-பல வகைகளில் அது சாதகமின்மையாக இருந்தது. அவர் வளரும்போது ஸ்டாலின் இந்த பளுவை சுமக்க வேண்டியிருந்தாலும் அதை நேர்மறையான செல்வாக்காக மாற்றினார். சவால்களையும் மீறி அவர் தனக்கென சொந்த அடையாளத்தையும் தனி இடத்தையும் உருவாக்கிக் கொண்டார். தனது தந்தையை தந்தை என்பதைவிட அதிகமாக உணர்வூட்டும் தலைவர், வழிகாட்டி என்றுதான் அவரைப் பார்ப்பதாக அவர் அடிக்கடி கூறுவார். விரைவிலேயே கலைஞர் அவர்கள் தனது மகனின் சார்பின்மை, ஆற்றல் ஆகியவற்றைக் கண்டு அதை ஏற்றுக் கொண்டார்.

காலம் செல்லச் செல்ல, மு.க.ஸ்டாலின் மக்களின் மரியாதையை வென்று, தன்னை ஒரு நல்ல நிர்வாகி என்றும் நிலைநாட்டினார். அவரது பதவிக்காலங்கள் எப்போதுமே தமிழ்நாட்டில் ஏராளமான அடிப்படை மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் கொண்டுவருவதைப் பதிவு செய்துள்ளன. இன்று, கட்சிக்குள்ளும் வெளியிலும் அனைவரும் அவரை தானாகவே உருவாகி வளர்ந்துள்ள தலைவராகத்தான் பார்க்கிறார்களே தவிர பரம்பரை அரசியல் பிரதிநிதியாக அல்ல.

அவர் துர்கா எனும் சாந்தா என்பவரை மணந்தபோது அவரது வயது 23, அதே 1976ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆணையின் பேரில் அவர் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டார். மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கைதியாக அவர் தேசீய பரபரப்பாகி, இந்திய ஜனநாயகத்தின் கருப்புக் கட்டமான அந்த அவரசர நிலை காலம் மற்றும் அரசியல் பழிவாங்கலுக்கு பலிகடாவானார். தி.மு.க. அதன் அரசியல் காலவரிசையில் சில பின்னடைவுகளை சந்தித்தபோது, மு.க.ஸ்டாலின் சவாலை எதிர்த்து உறுதியுடன் நின்று அந்தச் சிரமமான காலகட்டத்தில் தனது வலிமையை நிலைநாட்டினார்.

1982 முதல் அவருக்கு மிகவும் பிடித்தமானதும், மிக விரைவில் வேகமெடுத்து கட்சி இளைஞர்களுக்கு பெரும் உந்துசக்தியாக மாறிய தி.மு.க.இளைஞர் அணியை வழி நடத்தி வருகிறார். 1984ல் அவர் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ், பல்வேறு நடவடிக்கைகள், புதுமையான திட்டங்கள், அமைப்பு வலிமை ஆகியவற்றின் மூலம் இளைஞர் அணி பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

அணியினர் ஒவ்வொருவரும் பயிற்றுவிக்கப்பட்டு பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளனர். நன்மைகளைச் செய்யவும், சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து மக்களுக்கு உதவ அவர்களது அன்புத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழியைக் கடைபிடிக்க அது அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அவரது தலைமையின் கீழ் தி.மு.க.இளைஞர் அணி ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சேர்ந்து மென்மேலும் வலுப்பட்டு வருகிறது.

கட்சிக்குள் அவரது மெதுவான ஆனால் தொடர்ச்சியான உயர்வு காரணமாக 2003ஆம் ஆண்டு தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கடமை உணர்வுடனும் திறமையாகவும் கட்சி விவகாரங்களை பல ஆண்டுகளாக கையாண்ட பிறகு அவர் 2009ஆம் ஆண்டு பொருளாளராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் இளைஞர் அணி செயலாளர் என்ற பதவிதான் அவரது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானதாகும்.

எல்லா தருணங்களிலும் சவால்களிலும் எழுந்து ஒவ்வொரு சமயமும் தான் உறுதியானவர் என்பதை நிலைநாட்டி முன்னேறி, மக்களால் நேசிக்கப்பட்டும் எதிரிகளால் மதிக்கப்பட்டும் வருகிறார்.

தி.மு.க.வுக்கு வெளியே உள்ள பலருக்குக் கூட அவர்தான்- தற்போதும் எதிர்காலத்துக்கும் கட்சியின் முகமாக இருந்து வருகிறார்.

ஆகஸ்ட் 2009

ஆட்சி நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கு அவரது தனித்தன்மை வாய்ந்த பங்களிப்புகளுக்காக, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் தி,மு.க.இளைஞர் அணி தலைவரும், தமிழ்நாட்டின் முதல் துணைமுதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

பிப்ரவரி 2012

அமெரிக்காவிலுள்ள கெண்டுக்கி மாகாணத்தின் காமன்வெல்த் அளிக்கும் மிகஉயரிய கவுரவமான கெண்டுக்கி கர்னல் விருது அவரது பொது சேவைக்காக வழங்கப்பட்டது. கெண்டுக்கியின் நல்லெண்ணத் தூதுவராகவும் அவருக்கு கவுரவம் அளிக்கப்பட்டு, இந்த கவுரவத்தை அவர் முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் ரொனால்ட் ரீகன், நோபல் பரிசு பெற்றவரும் முன்னாள் இங்கிலாந்து பிரதமருமான வின்ஸ்டன் சர்ச்சில், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி மற்றும் பலருடன் பகிர்ந்து கொள்கிறார்.

மு.க.ஸ்டாலின் துர்கா என்கிற சாந்தா அவர்களை மண்ந்துள்ளார். அரசியலின் கடினமான வாழ்க்கையையும் ஒரு அரசியல்வாதியை மணந்துள்ளதையும் புரிந்துகொண்டும் பொறுத்துக் கொண்டும் அவரது மனைவி அவரின் மிகப்பெரிய ஆதரவாகத் திகழ்கிறார். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள், உதயநிதி மற்றும் செந்தாமரை. அவர்கள் முறையே கிருத்திகா மற்றும் சபரீஷ் ஆகியோரை மணந்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் வெற்றிகரமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் நடிகராவார். அவர் ரெட் ஜயண்ட் மூவிஸ் எனும் நிறுவனத்தின் அதிபராவார். 2009 முதல் அந்த நிறுவனம் பல வெற்றிப் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் உள்ளது. இத்துறையில் ஈடுபட்டுள்ள அவரது மனைவி கிருத்திகா உதயநிதி திரைப்பட இயக்குநராவார். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

அவரது மகள் செந்தாமரை சன்ஷைன் அகாடெமி மற்றும் சன்ஷைன் சென்னை என்ற ஒரு மாண்டிசரி பள்ளியின் தலைமையை கவனிக்கிறார், அவரது மருமகன் சபரீஷ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் தலைவராக உள்ளார்.

மு.க.ஸ்டாலின் விளையாட்டு, கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை மிகவும் விரும்புவராவார். ஓய்வு நேரத்தின் பெரும் பகுதியை அவர் தனது பேரக்குழந்தைகளுடன் கிரிக்கெட், பேட்மிண்டன், செஸ் போன்றவற்றை விளையாடுகிறார்.

பிரியமான தந்தை, இரக்கமனம் கொண்ட குடிமகன், வலிமைமிக்க ராஜியவாதி என்று ஒவ்வொரு பாத்திரமும் மற்றொன்றுக்கு துணைபுரியும், மு.க.ஸ்டாலின் அவர்களின் உண்மையான நோக்கம் தமிழக மக்களை முன்னணிக்கு தலைமையேற்று கொண்டுசென்று இதை ஒரு இலட்சிய மாநிலமாக்குவதாகும். கடுமையான பணி பலனளித்தால் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை....... 40 ஆண்டு வாழ்க்கை காலம் தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதன்றோ! ஒரு தலைவர் பிறப்பதில்லை, மாறாகத் தலைமையேற்க தேர்ந்தெடுக்கப்படுகிறார்-மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் வாழ்க்கை மக்களின் தேர்வையும் அவர் மீதுள்ள நம்பிக்கையையும் உறுதிசெய்கிறது- அந்தப் பாத்திரத்தை அவர் அடக்கத்துடன் ஆனால் தீவிரமாகப் பாவிக்கிறார்.

1977ம் ஆண்டு இந்திய தேசத்தில் நெருக்கடி நிலை அமலுக்கு வந்தது. ஆட்சியே போனாலும் பரவாயில்லை சுயமரியாதை மட்டுமே முக்கியம் எனக் கருதிய தலைவர் கலைஞர் அவர்கள் நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தார். இதன் விளைவாக இன்டெர்னல் ஆக்ட் எனும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட திமுக தலைவர்களுடன் தளபதி முக.ஸ்டாலின் அவர்களும் அடைக்கப்பட்டு ஒரு வருடம் சிறைவாசத்தை அனுபவித்தார். திருமணம் முடிந்து குறுகிய காலத்திலேயே மனைவியைப் பிரிந்து தனிமைச் சிறையை அனுபவித்த வேதனையை விட, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கும் அவ்வப்போது குறிப்பிடும் கொடுமையான சம்பவம் ஒன்று அப்போது அரங்கேறியது.

சிறையில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையை தன் மீது வாங்கி, அவரை பாதுகாக்க முயன்றதில், படுகாயமடைந்து, பிறகு சிகிச்சை பலனில்லாமல் இறந்த முன்னாள் மேயர் சிட்டிபாபு அவர்களின் நினைவு இன்றைக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மனதில் நீங்காத சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

2015 மு.க.ஸ்டாலின் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.